Header Ads

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2500 லீற்றர் டீசல் பொலிஸாரால் மீட்பு


அம்பலாங்கொடை பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2500 லீற்றர் டீசலை பொலிஸார் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். அண்மையில் அதே பிரதேசத்தில் அதிவேக பாதைக்கு அருகிலுள்ள இந்திய நிறுவனமொன்றிலிருந்து 6000 லீற்றர் டீசல் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைப்பற்றப்பட்ட டீசலும் அதனோடு தொடர்புபட்டதாக சந்தேகப்படும் பொலிஸார் தீவிர விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி இந்தியன் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் மற்றும் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பொலிஸார், அண்மையில் அம்பலாந்தொட்டையிலுள்ள இந்தியன் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றிலிருந்து 6500 லீற்றர் டீசல் காணாமற் போனதாக அந்நிறுவனம் பொலிஸில் முறைப்பாடு செய்தது.

அதனையடுத்து ஹிக்கடுவை பகுதியில் எரிபொருள் நிலையமொன்றிற்கு 100 லீற்றர் டீசலை ஒருவர் விற்பனை செய்திருந்தமை பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் மேற்படி 6500 லீற்றர் டீசல் மாயமானது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் தமக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கு அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 2500 லீற்றர் டீசலை பொலிஸார் கைப்பற்றியதுடன் ஒருவரைக் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.