Header Ads

பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம்; 44 பேர் பலி


பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 புள்ளிகளாக பதிவானது. கட்டிடங்கள், பாலங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலியாயினர். மத்திய பிலிப்பைன்சில் நெக்ரோஸ் தீவில் உள்ள கைகுல்கன் நகரத்தில் நேற்று காலை 11.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், மலைப்பிரதேசமான சோலோங்கன், பிலானாஸ், செபு நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. பல இடங்களில் கட்டிடங்கள், பாலங்கள் இடிந்தன. நிலநடுக்கம் கடுமையாக இருந்த பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்ததில் மொத்தம் 44 பேர் பலியானதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  

இது பற்றி நெக்ரோஸ் மேயர் எர்னஸ்டோ ரேயாஸ் கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சுமார் 40 பேர் காணவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்’ என்றார். நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர், அதை வாபஸ் பெற்றது. எனினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘நெக்ரோஸ் மாகாணத்தில் துமாகேட் நகரின் வடக்கே 70 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் சுமார் 46 கி.மீ. தூரத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியது’ என கூறப்பட்டது.
Powered by Blogger.