நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றமான விடயங்களுக்கு ஐ.தே.க. ஆதரவு
'நல்லிணக்க ஆணைக் குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்துவதற்கு ஐ.தே.க. தனது ஒத்துழைப்பை வழங்கும். இது குறித்து நாம் ஏற்கெனவே அறிவித்துள்ளோம்' என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஐ.தே.க.வின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.நா. அறிக்கையில் ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அது குறித்து அரசாங்கம் கட்டாயம் பதில் வழங்கவேண்டும். அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துறைகளை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நாம் கடந்த வருடம் அறிவித்திருந்தோம்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என அரசு கூறி வருகிறது. எமது நிலைப்பாட்டிற்கும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கும் இடையில் சில ஒருமைப்பாடுகள் உள்ளன. சிலர் 13 பிளஸ் பற்றி பேசுகின்றனர். சிலர் அதிகமான ஜனநாயக உரிமைகளை எதிர்பார்க்கின்றனர். சிலரோ அதிக அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
ஐ.தே.க. தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.