தேர்தலுக்கு தயார்: பாராளுமன்றம் ஏப்ரல் 23ல் கலைப்பு!- பிரதமர் ரணில்
இதேவேளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு தயார் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தப் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணை 23ம் திகதி முடிவடைகிறது. நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்காக 100 நாள் வேலைத்திட்டமொன்றை முன்வைத்தோம்.
இதனடிப்படையில் ஏப்ரல் 23ம் திகதி 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒட்சிசன் நிறைவு பெற்று 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும். தேர்தல் நடக்கும் திகதிக்கு ஏற்ப இந்த திகதியில் மாற்றம் செய்யப்படலாம்.
ஏப்ரல் 23ம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடவும் முடியாது. பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இந்தப் பாராளுமன்றம் ஜனவரி மாதம் 8ம் திகதி கலைக்கப்பட இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டதால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எமக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார்கள். இந்த 100 நாட்களில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. அவ்வாறே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது.